சினிமா காட்சி போல சம்பவம்: தங்கையை காதலித்த கல்லூரி மாணவரை காரில் கடத்திய வாலிபர்
- 3 மணி நேரத்தில் கூட்டாளிகளுடன் போலீசார் மடக்கினர்.
- இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து அமீர் அவரது நண்பர்கள் என 4 பேரை போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர் (வயது19). இவரது தங்கையும், தருமபுரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பரும், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இந்த விஷயம் அமீருக்கு தெரியவந்தது. இதனால் தனது தங்கையை பலமுறை கண்டித்துள்ளார்.
ஆனால் அவர் காதலன் மாதேஸ்சிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமீர், மாதேசை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் காதலை கைவிடுவதாக தெரியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்து மாதேசை கொலை செய்ய அமீர் தனது நண்பர்கள் மூலம் திட்டம் தீட்டினார். இதனால்அமீர், தனது நண்பர்களுடன் நேற்று மாலை ஒரு கார், ஒரு ேமாட்டார் சைக்கிளில் பாலக்கோடு கல்லூரிக்கு வந்தார்.
அப்போது கல்லூரி முடிந்து வெளியே நின்று கொண்டிருந்த மாேதசை, அமீர் கும்பல் காரில் தூக்கி சென்றனர். இதனால் அவர் அலறினார். அந்த அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள் ஓடி வந்தனர்.
பைக்கில் வந்த அமீரின் நண்பர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இது தொடர்பாக சிக்கிய அமீர் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தில் மாதேசை கடத்தி கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்தது.
உடனே போலீசார் சூளகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர்.
அப்போது மாதேசை கடத்தி வந்த வாகனத்தை மறித்தனர். ஆனால் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர்.
உடனே போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த அமீர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மாதேசை மீட்டனர்.
இது பற்றி பாலக்கோடு போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாலக்கோடு போலீசார் சூளகிரிக்கு விரைந்து சென்றனர்.
அங்கு போலீசார் தாங்கள் பிடித்து வைத்திருந்த அமீர் மற்றும் கூட்டாளிகளை பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாதேசையும் போலீசார் மீட்டு வந்தனர்.
இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து அமீர் அவரது நண்பர்கள் என 4 பேரை போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவரை கடத்திய 3 மணி நேரத்தில் போலீசார் விரைந்து சென்று பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்கள் இடையே சண்டைப்படம் பார்த்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.