கட்டுமான பணிகள் முழுமை அடையாத நிலையில் பள்ளி கட்டிடத்தை திறந்த தலைமையாசிரியை
- ஓசூரில் கட்டுமான பணிகள் முழுமை அடையாத நிலையில் அரசுப்பள்ளி கட்டிடத்தை திறந்த தலைமையாசிரியை பெற்றோர், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கல்வி நிர்வாகம், தலைமையாசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபனப்பள்ளி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் ஓடு வேய்ந்த பாழடைந்த கட்டிடத்தில் 120 மாணவர்கள் படித்து வந்த நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் முயற்சியால் ரூ. 32 லட்சம் மதிப்பில் புதிதாக பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணி தொடங்கப் பட்டது. தற்போது பள்ளி வகுப்புக்கள், கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் தலைமையாசிரியை ஆக லலிதா என்பவர் கடந்த 2022- ஆம் ஆண்டு பணியில் சேர்ந்ததாகவும், அவரது வருகைக்கு பின்னர் பள்ளியின் வளர்ச்சி தலைகீழாய் மாறிவிட்டதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கோபன பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து மாணவர்கள் அதிகளவில் இந்த பள்ளியில் படித்து வந்த நிலையில், தலைமையாசிரியை செயல்பாடுகள் பிடிக்காமல், தற்போது 50 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கும், 40 சதவீதம் பேர் அருகில் உள்ள வேறு ஒர் அரசு பள்ளிகருக்கும் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் 120 மாணவர்களில், 26 மாணவர்கள் மட்டுமே தற்போது இங்கு படிக்கின்றனர். இங்கு 4 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில், புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருந்தாலும், கழிவறை, முன்பக்க மைதானம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் மற்றும் பல்வேறு பணிகள் முடிவுறாத நிலையில், தலைமையாசிரியை லலிதா, கல்வித்துறை அதிகாரிகள், உள்ளாட் சித்துறையினர் என யாருக்கும் எந்த வித தகவல்களையும் தெரிவிக்காமல், முன் அறிவிப்பின்றி திடீரென நேற்று கட்டிடத்தை திறந்தார்.
இதனால் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பள்ளி மைதானம் சுத்தம் செய்யப்படாமல் கற்கள் குவிந்து காட்சியளித்தும், சுற்றுச்சுவர் இடிந்து விழும் சூழலில் உள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என யாரையும் அழைக்காமல், ஏன் கட்டிடத்தை திறந்தீர்கள்? என பெற்றோர்கள் கேள்வி எழுப்பியதால் ஆசிரியர்கள் வகுப்பறைக்கு பூட்டு போட்டு சமுதாய கூடத்திற்கு சென்றுவிட்டனர். இதுக்குறித்து கிராம மக்கள் கூறியதாவது;-
பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளி விழாக்கள், என எந்த நிகழ்ச்சிகளுக்கும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பெற்றோர்களிடம் எவ்வித தகவல்களையும் தகவல் தெரிவிக்காமல், அவரே தன்னிச்சையாக நடத்துகிறார் என்று கூறினர். இந்த பள்ளியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மாவட்ட கல்வி நிர்வாகம், தலைமையாசிரியை மீது உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளியை சிறந்த முறையில் இயங்கச் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.