இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் சிற்றுண்டி- மதிய உணவு: பி.கே. சேகர்பாபு
- கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
- தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று திருச்சி சமயபுரம், மாரியம்மன் கோவிலில் ஓய்வு பெற்ற நீதியரசர்கள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர். மாலா ஆகியோர் முன்னிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில், நாமக்கல், நரசிம்ம சுவாமி கோவில், சேலம், கோட்டை மாரியம்மன் கோவில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவில், காருவள்ளி, பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் ஆகிய 5 கோவில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் துணை பொது மேலாளர் அதுல் பிரியதர்ஷினியிடம் ஒப்படைத்தனர்.
மேலும், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் இருப்பில் இருந்த 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளை வங்கியில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், அமைச்சர் பி.கே. சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த திட்டத்தின்கீழ் ஆண்டு இறுதிக்குள் 1,000 கிலோ தங்கக் கட்டிகளை முதலீடு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆண்டிற்கு ரூ.10 கோடி வட்டித் தொகையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சமயபுரம், மாரியம்மன் கோவிலின் முழுநேர அன்னதானத் திட்டத்தில் வடை மற்றும் பாயசம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஏற்கனவே காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டிருந்த நிலையில் மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அழகர்கோவில் மற்றும் மருதமலை கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனையும் சேர்த்து 13 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு சுமார் 150 கோடி ரூபாய் செலவி டப்படுகிறது. இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் செயல்படுகின்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வருவதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.