உள்ளூர் செய்திகள்

முதல் மனைவி சொத்துக்காக வெட்டி கொலை - கணவருக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2025-04-16 12:10 IST   |   Update On 2025-04-16 12:10:00 IST
  • வீட்டையும், நிலத்தையும் கேட்டு தகராறு.
  • கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 39). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கார்த்தி 2-வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுடன் கார்த்தி வசித்து வருகிறார். இதனால் ரேவதி கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் ரேவதியின் திருமணத்தின்போது அவரது பெயரில் கார்த்தி நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்திருந்தார். இதனால் வீடு, சொத்து ரேவதியின் பெயரில் உள்ளது. தற்போது இந்த வீட்டையும், நிலத்தையும் ரேவதியிடம் திருப்பி கேட்டு கார்த்தி தகராறு செய்து வந்தார்.

கார்த்தியிடம் ரேவதி தனது 2 குழந்தைகளுக்கும் இந்த வீடு, நிலம் பயன்படும். சொத்து, வீடு அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?, அவற்றை எழுதி கொடுத்தால் 2-வது மனைவி சங்கீதாவுக்கு கொடுத்து விடுவாய்.

மேலும் என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாய் என கூறி சொத்து மற்றும் பட்டா உள்ளிட்டவை மாற்றம் செய்து தர முடியாது என மறுத்து விட்டார். ஆனால் நான் வாங்கி கொடுத்த நிலத்தையும், வீட்டையும் எனது பெயரில் மாற்றி எழுதி கொடு என்று கார்த்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் ரேவதியின் வீட்டிற்கு கார்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சொத்து தொடர்பாக கணவன்-மனைவி இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அரிவாளால் ரேவதியின் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

இதில் மூளை சிதறிய நிலையில் ரேவதி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் பயத்தில் அழுதனர்.

ரேவதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில் கார்த்தி தலைமறைவாக உள்ளார். ஆகவே ரேவதியை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறோம். அவர் பிடிபட்ட பிறகு தான் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.

முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News