உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் பட்டாசு விபத்து- 2 பேர் உடல் கருகினர்

Published On 2023-04-03 08:33 GMT   |   Update On 2023-04-03 08:33 GMT
  • வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.
  • பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 118-வது ஆண்டு ஜாத்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மாரியம்மனுக்கு அலங்காரம் செய்து அடிதாண்டம் போடுதல் நிகழ்ச்சியும் பம்பை உடுக்கையுடன் வீதி உலாவும் நடைபெற்றது.

வீதி உலாவின் போது வாண வேடிக்கை நடத்துவதற்காக மப்பேடு அடுத்த பேரம்பாக்கத்தில் இருந்து ஏராளமான பட்டாசுகள் கொண்டு வரப்பட்டு இருந்தது.

இதனை பட்டாசு உரிமையாளர் சாதிக் அலி மற்றும் ஊழியர் சஞ்சீவி ஆகியோர் திருவிழா நடைபெறும் இடத்திற்கு கொண்டு வந்து சாமி ஊர்வலத்தின் போது வெடிப்பதற்காக காலியான இடத்தில் தயார் நிலையில் வைத்திருந்தனர்.

அப்போது அதில் இருந்த பட்டாசு ஒன்றை ஊழியர் சஞ்சீவி வெடித்தார். அதில் இருந்த பறந்த தீப்பொறி அருகில் கட்டி வைத்திருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதில் கொண்டு வந்திருந்த அனைத்து பட்டாசுகளும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனை கண்ட பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டாசு வெடித்து சிதறியதில், பட்டாசு தயாரிப்பு உரிமையாளர் சாதிக் அலி, ஊழியர் சஞ்சீவிக்கு ஆகியோர் உடல் கருகினர். சாதிக் அலியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்கள் 2 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News