உள்ளூர் செய்திகள்

சொத்து குவிப்பு வழக்கில் சிக்கிய அரசு ரப்பர் கழக முன்னாள் அதிகாரி- ரூ.4 கோடி சொத்துக்கள் முடக்கம்

Published On 2023-02-18 13:59 IST   |   Update On 2023-02-18 13:59:00 IST
  • கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.
  • வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் சிவனய்யா (வயது 62).

இவர் கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். அப் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிவனய்யா மீது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் கடந்த மாதம் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிவனய்யாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் சிவனய்யாவின் சொத்துகளை போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப் பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் கூறியதாவது:-

அரசு ரப்பர் கழக அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் சிவனய்யா. இவர் பணியில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்துள்ளார். கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டில் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்றைய காலக்கட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிலங்களை வாங்கி உள்ளார். இதற்கான கணக்கு சரியாக காண்பிக்கப்படவில்லை. தற்போது இந்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும்.

இந்த நிலங்கள் சுமார் 14 இடங்களில் உள்ளன. இவற்றை தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் முடக்கம் செய்துள்ளோம். இதுதொடர்பாக அந்தந்த பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு முடக்கப் பட்ட நிலங்களின் விவரம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த சொத்துகள் அனைத் தையும் பயன்படுத்தவும், விற்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News