உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரி டிரைவர் கைது

Published On 2022-10-14 10:07 GMT   |   Update On 2022-10-14 10:07 GMT
  • டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் சாலையில் 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி விற்பனைக்காக ஏற்றி வந்தது தெரியவந்தது.
  • லாரி டிரைவர் உதயகுமார் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கற்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் தலைமையில், வாணிப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் சாலையில் கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தபோது 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி விற்பனைக்காக ஏற்றி வந்தது தெரியவந்தது.

கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை டி.என்.பாளையம் குமரன் கோயில் ரோடு பகுதியை சேர்ந்த உதயகுமார் (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

அதிகாரிகள் லாரி டிரைவரை விசாரித்ததில், புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பா ளையம் கிராமத்தில் உள்ள தனியார் கிரசர்க்கு கற்களை ஏற்றி செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் இது குறித்து பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிடிபட்ட லாரி டிரைவர் உதயகுமாரை விசாரித்த போது டிப்பர் லாரி டி.என்.பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, அனுமதியின்றி கற்களை விற்பனைக்காக ஏற்றி வந்த டிப்பர் லாரியை 3 யூனிட் கற்களுடன் பறிமுதல் செய்து, லாரி டிரைவர் உதயகுமார் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News