உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

Published On 2022-11-24 09:48 GMT   |   Update On 2022-11-24 09:48 GMT
  • இன்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இப்போராட்டத்தினால் அனைத்து திட்ட பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஈரோடு:

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் இரவு நேர ஆய்வுகூட்டங்கள் நடத்தக்கூடாது. விடுமுறை நாட்களில் ஆய்வு பணிகள் உயர் அலுவலர்களால் நடத்தப்படுவதை கைவிட வேண்டும்.

தமிழகம் முழுவதும் ஊராட்சி செயலர் முதல் உதவி இயக்குநர் நிலைவரை உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மொடக்குறிச்சி, ஈரோடு, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், பவானிசாகர், தாளவாடி போன்ற 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 732 பேர் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தினால் 100 நாள் வேலைதிட்டம், பாரதபிரதமர் வீடுகட்டும் திட்டம் உட்பட மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் அனைத்து திட்ட பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags:    

Similar News