கோப்பு படம்
மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு
- முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது.
- மழை கைகொடுத்தால் 2-ம் போக நெல்சாகுபடி பணிகளை துரித்தப்படுத்து வார்கள்.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வந்தது. தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து சரிய தொடங்கி உள்ளது.
நேற்று முன்தினம் 818 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 673 கன அடியாக குறைந்தது. இன்று காலை நீர்வரத்து மேலும் சரிந்து 526 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 132.50 அடியாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாயிகள் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நிலங்களை உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர். மழை கைகொடுத்தால் 2-ம் போக நெல்சாகுபடி பணிகளை துரித்தப்படுத்து வார்கள்.
வைகை அணையின் நீர்மட்டம் 70.18 அடியாக உள்ளது. 926 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1688 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் பாசனத்திற்கு 92 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. தேக்கடியில் மட்டும் 1.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.