உள்ளூர் செய்திகள்

ஓசூர் நகரில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை படத்தில் காணலாம்.

ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் பொது மக்கள் கடும் அவதி

Published On 2023-11-02 15:28 IST   |   Update On 2023-11-02 15:28:00 IST
  • ஓசூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிககள் அவதிப்பட்டு வருகின்றனர்.
  • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓசூரில், நேற்று காலை முதல் இரவு வரை நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர். பொதுவாகவே ஓசூர் நகரில் வாகன போக்கு வரத்து அதிகளவில் இருந்து எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்த நிலையில், தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள், குடும்பத்துடனும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் துணி கடைகள், ஷோரூம்கள், மால்கள், பலகார கடைகளுக்கு கூட்டம், கூட்டமாக வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால், நகரின் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, பாகலூர் சாலை, தாலுக்கா அலுவலக சாலை, உழவர்சந்தை சாலை, ரெயில் நிலைய சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று வழக்கத்தை விட அதிகளவில் வாகன போக்குவரத்து காணப்பட்டது.

காலை முதல் இரவு 9 மணியை தாண்டியும் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வாகனங்கள் அதிக எண்னிக்கையில் வந்து சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்தை கடக்க சுமார் 1 மணி நேரம் ஆனது.

மேலும் அனைத்து வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தொலைவிற்கு அணி வகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வண்டிகள், அவசர பணிகளுக்காக செல்வோர், மற்றும் சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைய நேரிட்டது.

தீபாவளி பண்டிகை முடியும் வரை, நகரின் முக்கிய பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து போலீசாரை நியமித்து, போக்குவரத்தை சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News