மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்ற டாக்டர் நிசாந்த்பாலாஜி.
தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச்சென்ற டாக்டர்
- ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மகாலில் திருமணம் நடந்தது.
- புதுப்பெண்ணை, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வு நடந்தது.
ஈரோடு :
ஈரோடு திண்டல் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர்கள் கே.சி.பழனிசாமி-டி.உமாமகேஸ்வரி. இந்த தம்பதியரின் மகன் டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி. இவர் தற்போது தோல் மருத்துவத்துக்கான உயர்கல்வி படித்து வருகிறார். இவருக்கும், ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த சி.ரமேஷ்-ஆர்.வசந்தாமணி தம்பதியரின் மகள் சி.ஆர்.ரித்துவுக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. பெற்றோர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ நேற்று காலை ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் உள்ள திருமண மகாலில் திருமணம் நடந்தது.
தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் டாக்டர் நிசாந்த் பாலாஜி தாலி கட்டி சி.ஆர்.ரித்துவை மனைவியாக ஏற்றுக்கொண்டார். பின்னர் புதுப்பெண்ணை, புதுமாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச்செல்லும் நிகழ்வு நடந்தது. அப்போது புதுமண தம்பதிகள் வித்தியாசமாக மாட்டு வண்டியில் பயணம் செய்தனர். மணமக்கள் செல்வதற்காக அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டி மண்டப வாசலில் தயாராக நின்று கொண்டிருந்தது. இரட்டை காளைகள் பூட்டப்பட்ட அந்த வண்டியில், மணமகன் டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி ஏறி உட்கார்ந்தார். அவரைத்தொடர்ந்து வண்டியில் அவருடைய மனைவி சி.ஆர்.ரித்து ஏறினார்.
மாட்டு வண்டி இருக்கையில் கால்களை மடக்கி உட்கார்ந்து கொண்ட 2 பேரும், ஆளுக்கொரு மாட்டின் தாம்பு கயிற்றை பிடித்துக்கொண்டனர்.
மணமகன் கையில் அலங்கரிக்கப்பட்ட சாட்டையுடன் மாடுகளை தட்டி வண்டி ஓட்டினார். மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் மணமக்கள் பயணம் செய்தனர். மணமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் மாட்டு வண்டியை அழகாக ஓட்டியது பார்ப்பவர்களையும் உற்சாகம் அடையச்செய்தது.
இதுகுறித்து டாக்டர் பி.நிசாந்த் பாலாஜி கூறியதாவது:-
எங்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமக்கள் ஊர்வலம் மாட்டு வண்டியில் இருக்க வேண்டும் என்று எங்கள் 2 பேரின் பெற்றோரும் விரும்பினார்கள். திருமணத்துக்கு முதல் நாள், மாப்பிள்ளை அழைப்புக்கு நானே வீட்டில் இருந்து மண்டபத்துக்கு மாட்டு வண்டி ஓட்டி வந்தேன். அதைத்தொடர்ந்து எனது மனைவியை தாலி கட்டிய கையோடு மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன். பாரம்பரிய முறையில் நமது முன்னோர்கள் வழியில் எனது வாழ்க்கை தொடங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மணப்பெண் ரித்து கூறும்போது, மாட்டு வண்டியில் பயணம் செய்தது மறக்க முடியாத மகிழ்ச்சியாக உள்ளது. பாரம்பரியத்தை போற்றும் வகையில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்றார்.