உள்ளூர் செய்திகள்

அமராவதி ஆற்றில் உலா வரும் முதலைகள்- பொதுமக்கள் அச்சம்

Published On 2023-02-04 05:32 GMT   |   Update On 2023-02-04 05:32 GMT
  • தாராபுரம் தாளக்கரை பகுதியில் உள்ள ஆற்றில் சில நாட்களாக முதலை தென்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
  • தற்போதுள்ள முதலை 15 வயதுடையது. 8 அடி நீளமுள்ளது.

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அமராவதி அணையில் 100க்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன. அமராவதி அணையில் இருந்து வெளியேறும் நீர், தாராபுரம்-கரூர் வழித்தடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

தாராபுரம் தாளக்கரை பகுதியில் உள்ள ஆற்றில் சில நாட்களாக முதலை தென்படுவதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து காங்கேயம் வனத்துறை அதிகாரி தனபால் கூறியதாவது:-

தாளக்கரை, அமராவதி ஆற்றின் நீர்வழித்தடம், இடையிடையே கட்டப்பட்டுள்ள நீர்தேக்கத்தில் முதலைகள் தென்படுவது வழக்கம். தண்ணீர் இருக்கும் இடத்தை தங்கள் வாழ்விடமாக மாற்றிக்கொள்வது இவற்றின் இயல்பு. தாளக்கரை ஆற்றில் இரு முதலைகள் இருந்தன. அதில் ஒரு முதலை, கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட மணலூர் ஆற்றுப்பகுதிக்கு சென்று விட்டது.

தற்போதுள்ள முதலை 15 வயதுடையது. 8 அடி நீளமுள்ளது. ஆற்றில் நீர் இருப்பு குறைவாக இருந்தால், முதலையை பிடித்து மாற்றிடத்தில் விட்டு விடுவோம். மாறாக ஆற்றில் நீர்வரத்து சற்று அதிகமாக உள்ளது. முதலையை கண்காணித்து வருகிறோம். ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News