உள்ளூர் செய்திகள்

10 ரூபாய் நாணய மூட்டைகள் ராஜீ.

கோர்ட்டுக்கு ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கு 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்த கணவர்

Published On 2023-04-19 10:08 GMT   |   Update On 2023-04-19 10:08 GMT
  • ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார்.
  • ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார்.

சங்ககிரி:

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் கிராமம் கிடையூர் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜீ (வயது 57). தனியார் நிறுவனத்தில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சாந்தி, தனது கணவர் ராஜீ என்பவர் தனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண்.2-ல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, ராஜீ தனது மனைவி சாந்திக்கு மாதந் மாதம் ரூ. 3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகை வழங்க வேண்டுமென உத்தர விட்டார்.

அவரது உத்தரவின்பேரில் ராஜீ மாதமாதம் ரூ.3 ஆயிரம் ஜீவனாம்சம் தொகையை சாந்திக்கு வழங்கி வந்தார். இந்த நிலையில் சாந்தி நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையையும் வழங்க வேண்டும் என மீண்டும் சங்ககிரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி, நிலுவைத் தொகையான ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்தை ராஜீ வழங்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையடுத்து, ராஜீ நேற்று , சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நிலுவையில் உள்ள ஜீவனாம்சம் தொகையை செலுத்த வந்தார். அப்போது அவர் ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்திற்கும் 10 ரூபாய் நாணயங்களாக 11 பைகளில் கட்டிக்கொண்டு வந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். கூடியிருந்த மக்கள் ஆச்சரியரித்துடன் பார்த்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News