உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் இருந்து மண்எண்ணை கேனை போலீசார் பறித்தனர்.

ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

Published On 2022-11-03 09:13 GMT   |   Update On 2022-11-04 09:42 GMT
  • மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர்.
  • ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார்.

கடலூர்: 

கடலூர் புருக்கீஸ் பேட்டை மஞ்சனிக்குப்பம் பகுதியில் அ ரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு 8 வீடுகள் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கியிருந்தனர். இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் முரளி தலைமையில் ஆய்வாளர்கள் அருள், தினகரன் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் ஜேசிபி எந்திரம் மூலம் வீடுகளை இடிக்க சென்றபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் அமர்நாத் தலைமையில் பொதுமக்கள் ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் திடீரென்று மண்எண்ணை கேனை எடுத்து வந்து தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த பெண்ணிடம் இருந்து உடனடியாக கேனை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். இங்கு இருந்து காலி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இதுசம்பந்தமாக உரிய முறையில் விசாரணை நடத்தி பொதுமக்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை இடிக்காமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக  காணப்பட்டது.

Tags:    

Similar News