உள்ளூர் செய்திகள்

நாயை அடித்து கொன்று முகநூலில் போட்டோ பதிவிட்ட வாலிபர் மீது வழக்கு

Published On 2023-03-11 09:08 GMT   |   Update On 2023-03-11 09:08 GMT
  • தினேஷ் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.
  • போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை கைது செய்ய தேடி வருகின்றனர்.

சென்னிமலை:

தேனியை சேர்ந்த தினேஷ் என்ற வாலிபர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் என்ற பகுதியில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் அவர் புதுசாக ஒரு செருப்பு வாங்கினார். அந்த செருப்பில் அவர் வளர்த்து வந்த நாய் அடிக்கடி இயற்கை உபாதை கழித்தது. இதையடுத்து அவர் அந்த நாயை அடித்து கொன்று விட்டார்.

பின்னர் இறந்த நாயின் போட்டோவை தனது முகநூலில் பதிவிட்டு அதில் அடிக்கடி எனது புது செருப்பில் நாய் இயற்கை உபாதை கழித்ததால் போட்டு தள்ளிவிட்டேன். மேலும் தயவு செய்து என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க. அந்த நாயால் ரொம்ப அவதிபட்டேன், பிளீஸ் என்று பதிவிட்டு இருந்தார். மேலும் முகநூலில் பதிவான இந்த போட்டோவை ஒரு வாட்ஸ் அப் குரூப்பிலும் பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த ஈரோடு பழைய பாளையத்தைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தினேஷை கைது செய்ய தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News