நீச்சல் பழகச்சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
- கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
- நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள காமக்காபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68). இவருக்கு நதீஸ்வரி, வைத்தீஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர். நதீஸ்வரிக்கும், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் நெல்லூரைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு நவீன்குமார் (14), நவீனா (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
நதீஸ்வரியின் கணவர் இறந்து விட்டதால் அவர் தனது 2 குழந்தைகளுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று நவீன்குமார் அருகில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கிணற்றில் நீச்சல் பழகி குளிக்கச் செல்வதாக கூறிச் சென்றான்.
அய்யாத்துரை என்பவரது தோட்டத்து கிணற்றில் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென நீரில் நவீன்குமார் மூழ்கினார். உடன் சென்ற ஜோதி சிவா மற்றும் கவியரசன் ஆகியோர் அவனை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோரிடம் சிறுவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினருக்கு புகார் தெரிவித்து கிணற்றில் நவீன்குமாரை தேடினர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு நவீன்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.