உள்ளூர் செய்திகள் (District)

தடை செய்யப்பட்ட சீன பூண்டுகள்: தமிழகத்தில் தங்கு தடையின்றி விற்பனை உஷார்...

Published On 2024-09-13 09:14 GMT   |   Update On 2024-09-13 09:14 GMT
  • பூண்டு உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
  • தற்போது சீன பூண்டு ரகசியமாக கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சென்னை:

பூண்டு உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. தினமும் 2 பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் இதயத்துக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இதனால் உணவில் அன்றாடம் பூண்டை பயன்படுத்தும் பழக்கம் தமிழ்நாட்டில் அதிகம்.

இது தவிர ஊறுகாயாக தயாரித்தும் பயன்படுத்துகிறார்கள். எனவே பூண்டு விலை அதிகரித்தாலும் வியாபாரம் அமோகமாக நடக்கும்.

தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி ஆகிய மலை பிரதேசங்களில் அதிக அளவில் பூண்டு பயிரிடப்படுகிறது. கடந்த 6 மாதங்களாக இந்த பகுதியில் பருவமழை பொய்த்ததால் எதிர்பார்த்த அளவு பூண்டு மகசூல் இல்லை.

ஒரு ஏக்கர் நிலத்தில் 400 கிலோ பூண்டு மட்டுமே அறுவடை செய்யப்பட்ட தாகவும் ஆனால் அதற்கான செலவு ரூ.3 லட்சம் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

அறுவடை செய்யப்பட்ட பூண்டை கிலோவுக்கு ரூ.340 என்று மொத்த வியாபாரியிடம் விற்பனை செய்ததாகவும் ஒன்றரை லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயி ஒருவர் கூறி உள்ளார். இந்த பூண்டுகள் சில்லரை விலைக்கு கிலோ ரூ.450 முதல் ரூ.600 வரை விற்கிறது.

இப்போது பூண்டிலும் சீனாக்காரர்கள் ஊடுருவி இருக்கிறார்கள். சீனாவில் இருந்து கொண்டு வரப்படும் பூண்டுகள் குஜராத் வழியாக தமிழகத்துக்கு வருவதாக கூறப்படுகிறது.

சீன பூண்டுகளை கிலோவுக்கு ரூ.200 முதல் ரூ.300-க்குள் கொள்முதல் செய்து மார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்பதாக கூறுகிறார்கள்.


120 முதல் 150 டன் சீன பூண்டுகள் கண்டெய்னர்கள் மூலம் குஜராத் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டிருப்பதாகவும் அதில் பெரமளவு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பூண்டு விற்பனை அமோகமாக நடக்கிறது. இப்போது மலைப்பூண்டு வரத்து குறைந்து சீன பூண்டுகள் அதிகம் விற்கப்படுகிறது.

இந்த பூண்டுகள் உற்பத்தி செய்யப்படும்போது பூச்சி கொல்லி மருந்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் அந்த பூண்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறியப்பட்டு கடந்த 2014-ம் ஆண்டிலேயே தடைசெய்யப்பட்டு விட்டது.

இந்த நிலையில் இப்போது ரகசியமாக கடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் பூண்டு மொத்த வியாபாரி பாபு கூறியதாவது:-

ஊட்டி பகுதியில் விளையும் பூண்டு லேசாக கருப்பு மற்றும் பிரவுனாக இருக்கும். புகை பூண்டு என்றும் சொல்வார்கள்.

இமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து வரும் பூண்டுகள் தூய வெண்மையாக இருப்பதால் மக்கள் அதையே விரும்பி வாங்குகிறார்கள்.

ஆனால் அங்கு விளை விக்கப்படும் பூண்டுகளின் விதைப் பூண்டுகள் இங்கிருந்தே செல்கின்றன. ஊட்டி மற்றும் கொடைக்கானலில் விளையும் பூண்டுகள் வடுகப்பட்டி வழியாக விதைக்காக இமாச்சல் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு அனுப்பப்படுகிறது.

இமாச்சலில் இருந்து வரும் பூண்டுகள் மலைப் பூண்டு எனப்படும். இதுதான் மருத்துவ குணம் உடையது. மத்திய பிரதேசத்தில் இருந்து வருவது நாட்டு பூண்டுகள் எனப்படும்.

கோயம்பேட்டில் தினமும் சராசரியாக 20 டன் பூண்டு விற்பனையாகிறது. முதல் ரகம் கிலோ ரூ.400 ஆகவும் குறைந்தது கிலோ ரூ.200-க்கும் விற்கப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News