உள்ளூர் செய்திகள்

(கோப்பு படம்)

தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்ற விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2022-10-21 22:32 GMT   |   Update On 2022-10-21 22:32 GMT
  • இந்தியாவில் ஆண்டுக்கு 35 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகுகின்றன.
  • 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்

அக்டோபர் 1 முதல் 31 ந் தேதி வரை நாடு முழுவதும் ஒரு முறைப் பயன்படுத்தும் ஒரு கோடி கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுவதற்கான இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் ஒரு முறைப் பயன்படுத்தும் 8 லட்சம் கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் நேரு யுவகேந்திரா சங்கதன் உறுப்பினர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத்தலங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைப் பகுதிகள் போன்றவற்றில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொள்வதோடு மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுவதாக கூறினார். 

அக்டோபர் 27ந் தேதி திருநெல்வேலியிலும், அக்டோபர் 29ந் தேதி கோயம்புத்தூரிலும், அக்டோபர் 31ந் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுவதோடு விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் 4 லட்சம் மாணவர்கள் உள்ளதாகவும், இவர்கள் மூலம் அக்டோபர் மாதத்தில் எட்டு லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்த திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லையா தெரிவித்தார். கடந்த 21ந் தேதி வரை இந்த மாணவர்களைக் கொண்டு 7,50,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News