அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
- ஓசூர் அருகே அரசு டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- பஸ் நிற்காமல் சென்றதால் சம்பவம் -
ஓசூர் அருகே பாத்தா கோட்டாவிலிருந்து ஓசூர் நோக்கி, நேற்று மாலை டவுன் பஸ் ஒன்று வந்தது. இதனை, கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (59) ஓட்டிச்சென்றார். கண்டக்டராக ஆசைத்தம்பி என்பவர் பணியில் இருந்தார். பஸ் செல்லும் வழியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நின்ற அந்த பஸ், ஒரு பயணியை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட தயாரானது.
அப்போது ஒரு வாலிபர் ஓடி வந்து பஸ்சில் ஏற முயன்றதாகவும், ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கையில் இருந்த இளநீரை எடுத்து பஸ் மீது வீசினாராம். இதில் பஸ்சின் பக்கவாட்டில் லேசாக சேதம் அடைந்தது. மேலும் இளநீர் கடையில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து டிரைவர் தலைமீது வீசினார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், அங்கு சென்று டிரைவரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் ஆர்.கே. ஹட்கோ பகுதியை சேர்ந்த ஆசம் (28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.