மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.1000 உயர்வு
- ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
- கிழங்கு மில் ஆலைகளில் ஜவ்வரிசி மாவு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக முள்ளுவாடி, தாய்லாந்து, வருஷ வெள்ளை, 226 வெள்ளை, பர்மா குங்கும ரோஸ் உள்பட பல்வேறு ரகங்களில் அதிக அளவில் மரவள்ளி பயிரிட்டுள்ளனர். இங்கிருந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்து புதுச்சத்திரம், செல்லப்பம்பட்டி, மின்னாம்பள்ளி, நாமகிரிப்பேட்டை, ஆத்தூர், மலைவேப்பன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் சேகோ பேக்டரிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.
கிழங்கு மில் ஆலைகளில் ஜவ்வரிசி மாவு தயாரித்து வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பு கின்றனர். ஆலை உரிமையாளர்கள் மரவள்ளி கிழங்கில் உள்ள மாவுச்சத்து புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர்.
அதன்படி கடந்த சில நாட்களாக மரவள்ளி கிழங்கு டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன்னுக்கு ரூ.1000 அதிகரித்து, ரூ.8 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. சிப்ஸ் தயாரிக்கும் தொழிலுக்கு மரவள்ளி கிழங்கு ஒரு டன் ரூ.8,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மரவள்ளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ள னர். இனிவரும் நாட்களில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.