ஈரோட்டில் தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது
- ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் தனபாலை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
- போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் தனபால் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்களை கைது செய்யக்கோரி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு டி.ஜி.பி. அபாஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி அறிவுறுத்தலின்படி, மாவட்ட குடிமைபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் உத்தரவின்பேரில், போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகினற்னா்.
இதில் கடந்த 2-ந் தேதி பவானி சிங்கம்பேட்டையில் வாகன சோதனையின் போது அவ்வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்திய பவானி பழனிபுரம் 4-வது வீதியை சேர்ந்த தனபால்(49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 2,640 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைதான தனபால் பவானி, அந்தியூா், பங்களாபுதூர், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் தனபாலை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதனை ஏற்ற கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தனபாலை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
இதன்பேரில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனபாலை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான தகவலை தெரிவித்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் தனபால் அடைக்கப்பட்டார்.