சாலைக்கு வந்த 12 அடி நீள ராஜநாகம்
- சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது.
- சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஊட்டி,
கூடலூர் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி வருகிறது. நேற்று முன்தினம் இரவு கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் காட்டு யானைகள் முகாமிட்டு இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சென்றனர். இந்தநிலையில் கூடலூர் ஊசிமலை அருகே சாலையோரம் 12 அடி நீளம் உள்ள ராஜநாகம் தென்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் செல்ல முயன்றது. ஆனால் தடுப்பு சுவர்கள் உயரமாக இருந்ததால், ராஜநாகத்தால் உடனடியாக அங்கிருந்து செல்ல முடியவில்லை. இதனால் ராஜநாகம் பல கட்ட முயற்சிக்குப் பிறகு சாலையோர புதர்கள் வழியாக வனத்துக்குள் சென்றது. இதனிடையே சாலையோரம் ராஜநாகம் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையோரம் தென்பட்டால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது. தானாகவே வனத்துக்குள் சென்று விடும் என்றனர்.