58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உசிலம்பட்டி, விருவீடு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம்
- 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது.
- கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் 58 கிராம மக்களின் குடிநீர், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான ஜீவாதாரமாக 58 கிராம கால்வாய் திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் வைகை அணையிலிருந்து 17.6 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மூலம் 925 எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
வழக்கமாக வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியவுடன் 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது ைவகை அணையில் 69 அடிக்கு மேல் நீர் நிரம்பி இரண்டு முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டும் 58 கிராம கால்வாயிலோ அல்லது திருமங்கலம் பிரதான கால்வாயிலோ தண்ணீர் திறக்கப்பட வில்லை.
இதுகுறித்து கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக உசிலம்பட்டி மற்றும் விருவீடு பகுதியில் வைகை அணையில் இருந்து 58 நீர் பாசன கால்வாயில் தண்ணீரை திறக்க கோரி முழு கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் 58 கால்வாயில் தண்ணீரை திறக்க கோரியும், 58 கிராம பாசன கால்வாயை நீர்ப்பாசன கால்வாயாக மாற்ற கோரியும், உசிலம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கோரியும் புறவழிச் சாலை அமைக்க கோரியும் உசிலம்பட்டி பகுதி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வன பாதுகாப்பு சட்டம் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாய சங்கங்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு மதுரை ரோட்டில் இருந்து தேவர் சிலை வரை ஊர்வலம் நடத்தினர்.
உசிலம்பட்டி பகுதியில் கடையடைப்பின் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.