உள்ளூர் செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறியபோது எடுத்தபடம்.

வெறிநாய் கடியால் 50 பேர் பாதிப்பு-ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ராஜா எம்.எல்.ஏ. நேரில் ஆறுதல்

Published On 2023-08-05 14:20 IST   |   Update On 2023-08-05 14:20:00 IST
  • பனவடலிசத்திரம் அருகே நாய் ஒன்று வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்து குதறியது.
  • வெறிநாய்க்கடித்து காயம் அடைந்த 14 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு வெறி நாய் அலைந்து திரிந்து 50-க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளையும் கடித்துக் குதறியது. இதனால் இப்பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது.

பனவடலிசத்திரம் அருகே உள்ள சிவகாமியாபுரம் பகுதியை சேர்ந்த வெள்ளை நிற நாய் ஒன்று வெறிபிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்து குதறியது. அதன் பின் மருதங்கிணறு பகுதியில் 5 பேரை கடித்தது. ஆராய்ச்சிபட்டியில் 3 மாடுகளையும், ஆயாள்பட்டி பகுதியில் 16 மாடுகளையும் கடித்தது. அதன் பின் குருக்கள்பட்டிக்கு சென்றது. அப்போது அங்கு பால் வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த பலரைகடித்து குதறியது.

இதில் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை சேர்ந்த பாப்பா (45), தாயாத்தாள் (75), முத்தத்தாள் (75), தனலட்சுமி (35), அன்னத்தாய் (55), ராஜ்குமார் (52), வேலுச்சாமி (70), அய்யம்மாள் (42), வெள்ளத்துரை (57) மற்றும் 7 வயது சிறுமி, சின்னகோவிலான்குளத்தை சேர்ந்த மாணிக்கத்தாய் (50), தர்மத்தூரணியை சேர்ந்த மாரிச்சாமி (55), பார்வதி (50) மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர்களை வெறிநாய் கடித்தது. வெறிநாய்க்கடித்து காயம் அடைந்த 14 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து சென்ற தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அதிக பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

தொடர்ந்து அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். மேலும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் வெறிநாய் பிடிபடும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார். தொடர்ந்து சங்கரன்கோவில் தலைமை குடிமை மருத்துவர் டாக்டர் செந்தில் சேகரிடம் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மேல் சிகிச்சைதேவைப்படும் சூழ்நிலையில் எந்த உதவி தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினார். அப்போது மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News