உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூரில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை

Published On 2025-02-17 11:33 IST   |   Update On 2025-02-17 11:33:00 IST
  • ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும்.
  • பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ஜே.ஜே. நகர் பகுதி கடற்கரையில் தினசரி இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிகாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஜெ.ஜெ. நகர் கடற்கரை பகுதியில் இருந்து வீரபாண்டி பட்டினம் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்பொழுது கடற்கரை பகுதியில் இருந்து கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது.

இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்தும் சென்றனர்.

ஆனால் தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டும் அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டும் இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.

கடந்த 2 வாரங்களில் இந்த ஆமையோடு சேர்த்து மொத்தம் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடற்கரையில் 100 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் 10 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் நேற்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆமையும் கரை ஒதுங்கியது.

இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே ஜெ. ஜெ. நகர் கடற்கரை பகுதியில் 50 கிலோ எடைகொண்ட 3½ அடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சென்னை கடற்கரையில் கடந்த மாதம் இதுபோல் அதிக அளவில் கடல் ஆமைகள் வாழ்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News