கிருஷ்ணகிரியில் விபத்துக்குள்ளான காரில் 347 கிலோ குட்கா பறிமுதல்
- கிருஷ்ணகிரி அருகே விபத்துக்குள்ளான காரில் 347 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
- தப்பியோடிய டிரைவருக்கு வலைவீச்சு-
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சொகுசு கார் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை வந்து கொண்டிருந்தது. அந்த கார் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் பையனப்பள்ளி பக்கமாக வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டைஇழந்து சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது.
இதையடுத்து கார் டிரைவர் காரை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் கார் விபத்துக்குள்ளான தகவல் அறிந்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அங்கு சென்றனர். அந்த நேரம் அவர்கள் காரை சோதனை செய்த போது காருக்குள் 347 கிலோ தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்டவை இருந்தது தெரிய வந்தது- அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆகும்.
அதையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பெங்களூருவில் இருந்து அந்த காரில் குட்கா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அந்த காரை விட்டு சென்ற மர்ம நபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.