உள்ளூர் செய்திகள்

மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு

Published On 2023-05-22 10:03 GMT   |   Update On 2023-05-22 10:03 GMT
  • 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
  • 2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது.

சேலம்:

சேலம் இரும்பாலையில் இந்திய அரசின் ெதாழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம், பணியாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நலன்களை வழங்கும் முதன்மையான அமைப்பாகும்.

கடந்த 20-ந் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் இந்தியா முழுவதும் 13.40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

மார்ச் மாதத்தில் சேர்க்கப்பட்ட 13.40 லட்சம் உறுப்பினர்களில், சுமார் 7.58 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதல் முறையாக ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இணைந்துள்ளனர்.

புதிதாக இணைந்த உறுப்பினர்களில், 2.35 லட்சம் உறுப்பினர்கள் 18-21 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1.94 லட்சம் உறுப்பினர்கள் 22-25 வயதுடையவர்கள் ஆவர். புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் 18-25 வயதுடையவர்கள் 56.60 சதவீதம் ஆவர்.

2.57 லட்சம் பெண்கள் பதிவு

பாலின வாரியான ஊதியத் தரவுகள்படி, 2023 மார்ச் மாதத்தில் 2.57 லட்சம் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உறுப்பினர் சேர்க்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 5 மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன.

தமிழ்நாடு 2-வது இடம்

மொத்த உறுப்பினர்களில் இந்த மாநிலங்கள் 58.68 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இதில் மகாராஷ்டிரா 20.63 சதவீதம் உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மாநிலம் 10.83 சதவீதம் உறுப்பினர்களுடன் 2-ம் இடத்திலும் உள்ளது.

2022-2023 நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்களை சேர்த்துள்ளது. முந்தைய நிதியாண்டான 2021-2022 உடன் ஒப்பிடும்போது 13.22 சதவீதம் உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News