உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் இன்று காலை பரபரப்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
தருமபுரியில் பொது பாதை ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்துள்ள ஒட்டப்பட்டி அருகேயுள்ளது ராயல் நகர். இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு முன்பாக உள்ள விஜயநகரில் ராயல் நகருக்கு செல்லும் பொது வழி பாதை உள்ளது.
இந்த வழியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகிறார். பொது வழி பாதையில் மின்கம்பத்தை நடும் முயற்சியில் அந்த தனி நபர் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் அவரிடம் நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.
இதனால் ராயல் நகரை சேர்ந்த பொதுமக்கள் இன்றுகாலை தருமபுரி-சேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களிடையே நடந்த சம்பவம் குறித்து விசாரித்த அவர்கள் ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆளானவரிடமும் பேசினர். ஆனால் அவர் பிடி கொடுக்கவில்லை.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் தாசில்தார் பெருமாள்,வ ருவாய்த்துறையினரும் வந்தனர். பின்னர் சர்ச்சைக்குரிய அந்த நிலத்தை அளந்து முடிவு செய்யும் வரை தனி நபரால் ஊன்றப்பட்ட மின்கம்பத்தை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் அந்த மின்கம்பம் அகற்றப்பட்டது. அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவி ட்டனர். இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு புகாருக்கு ஆளாகியுள்ளவரும் ஓய்வு பெற்ற தாசில்தார் என்பது குறிப்பிடத்தக்கது.