சென்னை விமான நிலையத்தில் ரூ.4.21 கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம் பறிமுதல்
ஆலந்தூர்:
வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து கடத்தி வரப்படும் தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தங்கத்தை கடத்தி வந்தவர்கள் அதை கழிவறையில் பதுக்கி வைத்தனர். சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலைய கழிவறையில் சோதனை நடத்திய போது 9.02 கிலோ எடை கொண்ட தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.4.21 கோடி ஆகும்.
இந்த தங்கம் துபாய் விமானத்தில் இருந்து கடத்தி வரப்பட்டது ஆகும். தங்கத்தை கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.