உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை - திருப்பூர் வழித்தட தனியார் பஸ்களை மீண்டும் இயக்க அறிவுறுத்தல்

Published On 2022-06-01 10:12 GMT   |   Update On 2022-06-01 10:12 GMT
பஸ்கள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

உடுமலை:

திருப்பூர் - உடுமலை வழித்தடத்தில் பல்லடம், கேத்தனூர், ஜல்லிபட்டி, செஞ்சேரிபுத்துார், குடிமங்கலம் என50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் தங்களது விளை பொருட்களை உழவர் சந்தைக்கு கொண்டு வரவும், பொதுமக்கள் ரெயில்கள் வழியாக திருப்பூர் வந்திறங்கி, குடிமங்கலம், உடுமலை, மடத்துக்குளம், மறையூர் மற்றும் மூணார் செல்ல அதிகாலையில் இயக்கப்பட்ட பஸ் வசதியாக இருந்தது.

அதிகளவு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதிகாலையில் இயக்கப்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. இது குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவின் அடிப்படையில், மீண்டும் இரண்டு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திருப்பூரிலிருந்து அதிகாலை 4 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும், 4:30 மணிக்கு ஒரு தனியார் பஸ்சும் உடுமலைக்கு இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ்களையும் இயக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில், குறை தீர் கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் சம்பந்தபட்ட 2 தனியார் பஸ்களும் உரிய கால அட்டவணைப்படி இயக்க வேண்டும், என திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.

உடுமலையிலிருந்து திருப்பூருக்கும், அங்கிருந்து உடுமலைக்கும் தினமும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள், அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பனியன் கம்பெனிகளுக்கு சென்று வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில் போதிய அளவு பஸ்கள் இல்லாததால் கூட்ட நெரிசல் ஏற்படுவதோடு, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். எனவே, பயணிகள் அதிகம் வந்து செல்லும் காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News