உள்ளூர் செய்திகள்
கபிஸ்தலம் ஊராட்சி மன்றத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கபிஸ்தலம்:
பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கபிஸ்தலம் கிராமத்தில் நடைபெற்றது.
முகாமில் பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல்கனி கலந்து கொண்டு பேசுகையில்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவழிக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களை விட ஆசிரியர்களிடமே தனக்கு ஏற்பட்டுள்ள குற்றம் தொடர்பான பிரச்சனைகளை கூறிவருகிறார்கள். எனவே பெற்றோர்கள் அன்புடன் அதிக நேரத்தை குழந்தைகளுக்காக செலவழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் தயங்காமல் நீதிமன்றத்தை நாடலாம். ஏழை பணக்காரர்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் அனைத்து நீதிமன்றத்திலும் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.
வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத பட்சத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞரை நியமித்து நீதி பெறலாம். இதற்கான வழக்கறிஞர் ஊதியத்தை அரசே வழங்குகிறது. குடும்ப பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தில் செயல்படும் சமரச மையத்தின் மூலம் நீதிமன்றம் முறை அல்லாமல் மாற்று முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகிறது என்று கூறினார்.
முகாமில் கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலட்சுமி பாலசுப்பிரமணியன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சட்ட பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.