உள்ளூர் செய்திகள்
கருக்கலைப்பு

1500 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்தது அம்பலம்- கைதான செவிலியர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2022-05-30 16:16 IST   |   Update On 2022-05-30 16:16:00 IST
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:

செவிலியர் கற்பகம் சட்டவிரோத கருக்கலைப்பு குறித்து போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அந்த வாக்குமூலத்தில் அவர் தெரிவித்தது குறித்து போலீசார் கூறியதாவது:-

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஊழியர்களிடம் எங்களது செல்போன் எண்ணை கொடுத்துள்ளோம். அந்த மருத்துவமனைகளுக்கு வரும் கருவுற்ற பெண்களிடம் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? என தெரியவேண்டுமா? என ஊழியர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் சரி என்றால் உடனே எங்களது செல்போன் எண்ணை கொடுப்பார்கள்.

அவர்கள் தொடர்பு கொண்டு எங்களிடம் பேசுவார்கள். நாங்கள் உடனே அவர்களுக்கு ஆலோசனைகளை கூறுவோம். அதற்கு சரி என்றால் உடனே அவர்களுக்கு ஒரு தேதியை கொடுப்போம். அதன் பின்னர் தான் அவர்களை தருமபுரிக்கு வரவைப்போம்.

இதில் 6 மற்றும் 8 கருவுற்ற பெண்கள் சேர்ந்தால் தான் ஸ்கேன் செய்து சிகிச்சை அளிப்போம். அதனால் எங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? அறிய ஸ்கேன் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வாங்குவோம்.

மேலும் அந்த கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால் உடனே சிகிச்சை அளித்து கருவை கலைத்து விடுவோம். இது கடந்த ஒரு வருடமாக நடந்து கொண்டிருந்தது.

நேற்று முன்தினம் 6 கருவுற்ற பெண்களுக்கு ஸ்கேன் செய்தோம். அதில் ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை இருப்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையை அகற்ற சிகிச்சை அளித்தோம்.

அப்போது அவருக்கு பல்ஸ் குறைந்தது. இதனால் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அபபோது அவர் கொடுத்த புகாரின் பேரில் நாங்கள் சிக்கி விட்டோம். நாங்கள் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருவில் உள்ள பாலினம் என்ன என்பதை கண்டறிந்து கூறியுள்ளோம். அதை வைத்து பெண் குழந்தைகளாக இருந்தால் அவர்கள் கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளனர்.

இவ்வாறு கற்பகம் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News