இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலருக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்
திருப்பூர்:
இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் கீழ், தன்னார்வலருக்கான சம்பளம் தாமதமாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் தன்னார்வலர்கள் கூறியதாவது:-
இல்லம் தேடி கல்வி திட்டமானது படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக உள்ளது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது மட்டுமின்றி, அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய், வறுமையில் உள்ளோருக்கு கூடுதல் வருவாய் அளிக்கிறது.
கல்வித்துறையின் விதிமுறைகளை பின்பற்றி தவறாமல் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறோம். இதற்காக வழங்கப்படும் சம்பளம் நாளுக்கு நாள் தாமதமாகி வருகிறது. கடந்த மார்ச்., மாத சம்பளமே இந்த மாதம்தான் கிடைத்தது. ஏப்ரல் மாத சம்பளம் இன்னும் வரவில்லை.
தற்போது பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளதால் இல்லம் தேடி கல்வியும் நடக்கவில்லை. எனில் இம்மாதம் சம்பளம் வருமா என்பதும் தெரியவில்லை. வழங்குவது ஆயிரம் ரூபாய் என்றாலும் அதை காலம் தாழ்த்தாமல் வழங்கினால் நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.