உள்ளூர் செய்திகள்
கொள்ளை முயற்சி நடந்ததை தொடர்ந்து பூட்டி வைக்கப்பட்ட ஏ.டி.எம். மையம்.

காரமடை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2022-05-29 10:11 GMT   |   Update On 2022-05-29 10:11 GMT
காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை மாவட்டம் காரமடை அருகே மருதூரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் எஸ்.பி.ஐ. வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் முகமூடி அணிந்தபடி மர்மநபர் ஒருவர் அந்த மையத்துக்குள் நுழைந்தார். அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றார்.

அப்போது அங்கிருந்த அபாய ஒலி அடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

இந்த தகவல் வங்கிக்கு சென்றது. அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திர பாபு தலைமையிலான போலீசார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது மர்மநபர் ஏ.டி.எம். எந்திரத்தின் பின் பகுதியை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

பின்னர் ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் முகமூடி அணிந்தபடி ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து போலீசார் அக்கம் பக்கத்தில் அந்த மர்மநபர் உள்ளாரா? என தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News