உள்ளூர் செய்திகள்
அமைச்சர் பொன்முடி

என்ஜினீயரிங் கல்விக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்- அமைச்சர் பொன்முடி

Published On 2022-05-28 03:00 GMT   |   Update On 2022-05-28 03:00 GMT
என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிப்பது, கவுன்சிலிங் ஆகியவை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை:

இந்த ஆண்டு தமிழகத்தில் பாலிடெக்னிக் என்ற பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபிறகு முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு தனியாகவும், பிளஸ்-1, பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் கல்வியில் சேர்வதற்கான அட்டவணை தனியாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான செய்தித்தாள் விளம்பரம் 30.6.2022 அன்று வெளியிடப்படும். முழு நேரம், பகுதிநேரம் மற்றும் சிறப்பு ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் பதிவு 1.7.2022 அன்று தொடங்கி 15.7.2022 அன்று முடியும். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு கவுன்சிலிங் 22.7.2022 அன்று நடைபெறும். கல்வி நிறுவனங்களிடம் இருந்து பி-பாரம் பெறும் இறுதித் தேதி 29.7.2022 ஆகும்.

நேரடியாக பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு கல்வியில் சேர விரும்புவோருக்கு (ஆன்லைன்) செய்தித்தாள் விளம்பரம் 22.6.2022 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் பதிவு 23.6.2022 அன்று தொடங்கி 8.7.2022 அன்று முடியும்.

பொதுவாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முன்பு குறைவாக இருந்தது. இப்போது சற்று சீர்பெற்றுள்ளது. இந்த கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு 10 புதிய பாடத்திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளோம்.

எந்திரவியல் (கணினி மூலம் வடிவமைத்தல், ஆட்டோமொபைல் (சாண்ட்விச்), அலுவலக மேலாண்மை மற்றும் கணினி பயன்பாடு, இதயத்துடிப்பு பதிவு தொழில்நுட்பம், இணையவலை வடிவமைப்பு, தளவாட தொழில்நுட்பம், உயிர்மருத்துவ மின்னணுவியல், அக வனப்பியல், ஆடை வடிவமைப்பியல், வேளாண்மை பொறியியல் ஆகிய 10 புதிய பாடத்திட்டங்களை சென்னை மைய பாலிடெக்னிக் கல்லூரி, மாநில வணிகவியல் பயிலகம், டாக்டர் தர்மாம்பாள் அரசினர் மகளிர் பாலிடெக்னிக், புத்தூர் சீனிவாசா சுப்புராயா பாலிடெக்னிக், தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசினர் பாலிடெக்னிக் மற்றும் கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, கரூர், அரியலூர், தூத்துக்குடி, ஊத்தங்கரை என மொத்தம் 13 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிதாக தொடங்கவிருக்கிறோம்.

இந்தப் பாடத்திட்டத்தில் 30 முதல் 60 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். மாணவர்கள் விரும்பும் வகையிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் இந்த பாடத்திட்டங்கள் அமைந்துள்ளன. இவை மற்ற பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் குறித்து கல்வியாளர்களை கலந்தாலோசிக்க உள்ளோம். என்ஜினீயரிங் கல்வியில் சேர்ந்துவிட்டு, பின்னர் 'நீட்' தேர்வை எழுதி பல மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு சென்று விடுகின்றனர். எனவே 'நீட்' தேர்வுக்குப் பிறகு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்துவது பற்றி இன்னும் ஒரு வாரத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

என்ஜினீயரிங் சேர்க்கைக்காக விண்ணப்பிப்பது, கவுன்சிலிங் ஆகியவை ஆன்லைன் மூலம் நடத்தப்படும். அதை உறுதி செய்வதற்கான முடிவை அதற்கான குழு எடுக்கும். அதில் முன்பு நடந்ததுபோல முறைகேடு நடக்காத அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளிகளில் இருந்து விண்ணப்பிக்கும் வசதிகள் செய்து தரப்படும். இது தவிர விண்ணப்பிப்பதற்காக 100 இடங்களையும் ஏற்பாடு செய்து தருவோம். நேரடியாக மாணவர்களும், பெற்றோரும் வருவது அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதுபற்றி கேட்டாலும் பரிசீலிக்கலாம். ஆனால் இதுவரை வந்துள்ள கோரிக்கை ஆன்லைன் என்பதுதான்.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டு பழைய கட்டணமே வசூலிக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான தேதியை தமிழக கவர்னர் கொடுப்பார். அதன் பிறகு ஏற்பாடுகள் செய்யப்படும். திறந்தவெளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 30-ந் தேதி நடைபெறவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News