உள்ளூர் செய்திகள்
ராயபுரத்தில் தி.மு.க. பிரமுகர் கொலை: கைதான அக்காள்-தம்பி உள்பட 3 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
திமுக பிரமுகர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அக்காள் மற்றும் தம்பி உள்பட 3 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
மணலி, செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரான சக்கரபாணி(65) கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயபுரத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி தமிம்பானு என்பவர் வீட்டில் இருந்தது. சக்கரபாணியின் தலை மற்றும் குடல் பகுதிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
தலை இன்னும் சிக்காததால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னரும் உறவினர்களிடம் ஒப்படைக்கபடவில்லை. மீட்கப்பட்டது சக்கரபாணின் உடல் என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவரது டி.என்.ஏ. சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து மீனவர்கள் மற்றும் தீயணைப்பு படை உதவியுடன் அடையாறு ஆற்றில் சக்கரபாணியின் தலையை போலீசார் தேடி வருகின்றனர். குடல் பகுதியை காசிமேடு பைபர் படகு அருகில் உள்ள கடல் பரப்பில் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த கொலை வழக்கில் தமீம்பானு அவரது தம்பி வாஷிம் பாஷா, ஆட்டோ டிரைவர் டில்லிபாபு ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 16 வது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ராயபுரம் போலீசார் மனு செய்திருந்தனர். அவர்களை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து ராயபுரம் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் தமீம்பானு, அவரது தம்பி வாஷிம் பாஷா, ஆட்டோ டிரைவர் டில்லி பாபு ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து தீவிர விசாரணை செய்து வருகிறார். எனவே இந்த வழக்கில் மேலும் கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.