ஈரோடு திண்டலில் இன்று தனியார் வங்கி மேலாளரின் வீட்டில் புகுந்த 9 அடி நீள சாரைப்பாம்பு
ஈரோடு:
ஈரோடு திண்டல் மேடு பகுதியில் வசிப்பவர் சிவகுமார். இவர் தனியார் வங்கியின் இன்சூரன்ஸ் பிரிவில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பகுதியில் புது வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வீட்டின் அருகே பழைய பொருட்கள் வைப்பதற்காக செட் ஒன்றை கட்டியுள்ளார். அதில் உபயோகிக்கப்படாத பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை அந்த செட்டை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது பாம்பு போல் ஏதோ ஒன்று நெளிவதை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து சிவகுமாரிடம் தெரிவித்தனர். உடனே அவர் இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
யுவராஜ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செட்டில் தேடி பார்த்தார். அப்போது 9 அடி நீள சாரைப்பாம்பு பதுங்கி இருந்ததை அவர் கண்டு பிடித்தார். உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்டு 9 அடி நீள சாரைப் பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை அவர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.