உள்ளூர் செய்திகள்
கைது

தலைமை செயலகத்திற்கு போன் செய்து மிரட்டல் விடுத்த ரெயில்வே ஊழியர் கைது

Update: 2022-05-23 03:53 GMT
இடப்பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ரெயில்வே ஊழியர் தலைமை செயலகத்திற்கு போன் செய்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆழ்வார்குறிச்சி:

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள தாட்டான்பட்டியை சேர்ந்தவர் ஜெபஸ்தியான். இவரது மகன் அந்தோணி ராஜ் (வயது34). இவர் ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

ஜெபஸ்தியானுக்கு சொந்தமான இடம் தாட்டான்பட்டி ஊருக்கு வெளியே உள்ளது. அதன் அருகே அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கு இடம் உள்ளது. இவர்கள் 2 பேருக்கும் இடையே அந்த இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து ஜெபஸ்தியான் சமீபத்தில் ஆழ்வார்குறிச்சி போலீசில் இடப்பிரச்சினை தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

அதனை விசாரித்த போலீசார் தாட்டான்பட்டியில் பாதி பகுதி நெல்லை மாவட்டம் வி.கே.புரம் போலீஸ் நிலைய எல்லைக்குள் வரும் என்பதால் நாங்கள் இடத்தை ஆய்வு செய்து அதன் பின்னர் விசாரணை செய்கிறோம் என்று தெரிவித்து உள்ளனர்.

எனினும் இடம் தொடர்பாக விரைந்து விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்தோணிராஜ் ஆத்திரம் அடைந்தார். நேற்று அவர் போலீஸ் அவசர உதவி எண்ணான 100-க்கு போன் செய்து பேசி குடிபோதையில் உளறியதாக கூறப்படுகிறது.

அவர் சென்னை தலைமை செயலகத்திற்கு போன் செய்து ‘முதல்-அமைச்சர் வீட்டுக்கோ அல்லது தலைமை செயலகத்திற்கோ போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக யாரேனும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் அல்லவா’ என்று பேசி உள்ளார்.

மேலும் மது போதையில் அவர் மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஆழ்வார்குறிச்சி போலீசார் நேற்றிரவு அந்தோணிராஜை கைது செய்தனர்.
Tags:    

Similar News