உள்ளூர் செய்திகள்
சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் - சிவஜோதி தரிசனம்

Published On 2022-05-19 14:45 IST   |   Update On 2022-05-19 14:45:00 IST
சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்-சிவஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற்றது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட திருவெண்ணீற்று–மையம்மை உடனாகிய சிவலோக தியாகேசர் சுவாமி கோயில் உள்ளது. 

இக்கோவிலில் தனி சன்னதியில், தோத்திரபூர்ணா பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார்.

இக்கோவிலில் அன்றைய காலத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய இந்த ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில் நடைபெறும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. 

முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் செய்விக்கப்பட்டது.

 பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது.நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடு செய்தனர்.

அதிகாலை சிவ ஜோதிதரிசனம் நடைபெற்றது. ஸ்ரீ மத் சட்டநாததம்பிரான் சுவாமிகள் அருள்பிரசாதம் வழங்கினார்.

Similar News