உள்ளூர் செய்திகள்
அறந்தாங்கி நாகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ விபத்து
அறந்தாங்கி நாகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில தீ விபத்து ஏற்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா நாகுடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகுடி, களக்குடி, மாணவநல்லூர், கூகனூர், சீனமங்களம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மருத்துவப் பயனடைந்து வருகின்றனர்.
இங்கு மகப்பேறு மருத்துவம், பொது மற்றும் அவசரகால சிகிச்சை அளிக்கப்படுகிறது. உள்நோயாளிகள் யாரும் இல்லாத சூழ்நிலையில் நேற்று புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளித்துவிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் சென்றுள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக வளாகத்திற்குள் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பணியிலிருந்த செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகியோர் அலறியடித்து வெளியேறியுள்ளனர். அதனையடுத்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் தீ மளமளவென பரவி மருத்துவ வளாகம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.
இதில் நோயாளிகளுக்கான 15க்கும் மேற்பட்ட படுக்கைகள், கொரோனா தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள்,இரத்த பரிசோதனை நிலையம், சித்த மருத்துவ பிரிவு அறைகள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை விரைந்து அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள், உள்நோயாளிகள் யாரும் தங்கியிருந்து சிகிச்சை பெறாத நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.