உள்ளூர் செய்திகள்
ஓசூரில் அரியவகை நோயால் அவதிப்படும் 9 மாத குழந்தை அரசுக்கு பெற்றோர் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரியவகை நோயால் அவதிப்படும் 9 மாத குழந்தையின் சிகிச்சை செலவுக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டைட்டான் டவுன்ஷிப் அருகே வசித்து வருபவர் சிவகுமார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர், உறவினர் பெண்ணான பூங்கொடி (வயது 21 ) வயது என்பவரை திருமணம் செய்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர்களுக்கு ரித்விக் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தைக்கு 5-வது மாதத்தில் சளி காய்ச்சல், தோல் நோய் ஏற்பட்டுள்ளது. இதற்கு பெங்களுருரில் உள்ள தனியார் மருத்துமனையில் சுமார் ரூ 12 லட்சம் வரை செலவு செய்தும் குணமடையவில்லை.
பின்னர், மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு அலோஜெனிக் பெரிபெரல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அறுவை சிகிச்சை செய்ய ரூபாய் 25 லட்சம் வரை செலவாகும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.
தங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால், தமிழக முதல்வர் உதவி புரிந்து, குழந்தையை காப்பாற்ற வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.