உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 872 பேருக்கு சிகிச்சை மருத்துவக்கல்லூரி டீன் பேட்டி

Published On 2022-05-10 16:06 IST   |   Update On 2022-05-10 16:06:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 872 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக்கல்லூரி டீன் பேட்டியில் கூறினார்.
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  ‘இன்னுயிர் காப்போம் நம்மைகாக்கும் 48’ திட்டத்தின் கீழ் இதுவரை, 872 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறினார். 

இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ந் தேதி  ‘இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு, 48 மணி நேரத்தில் சிகிச்சைக்கு ஆகும் செலவை அரசே ஏற்று வருகிறது. 

கடந்த ஏப்.,20-ந் தேதி கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சென்னப்பன் (வயது 60) என்பவர் மோட்டார்சைக்கிளில்  சென்றபோது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.  இதில் படுகாயமடைந்த சென்னப்பனுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் உடனடியாக எக்ஸ்ரே, சி.டி., ஸ்கேன், யூ.எஸ்.ஜி., ஸ்கேன் எடுக்கப்பட்டது.

இதில், அவருக்கு வயிற்றுப் பகுதி மேலிழுத்து நுரையீரலோடு கலந்திருந்ததும், மண்ணீரல் கிழிந்து ரத்தக்கசிவும், இடது மார்பு கூட்டில் 5 விலா எலும்புகள் உடைந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவருக்கு அடுத்த, 6 மணி நேரத்தில், 3 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மண்ணீரலை அகற்றி, நெஞ்சுப்பகுதிக்குள் இருந்த இரைப்பையை வயிற்றுக்குள் மீண்டும் செலுத்தி, உதரவிதானம் கிழிந்ததும் சரி செய்யப்பட்டுள்ளது. 

மார்பு கூட்டில் குழாய் பொருத்தி அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன், 5 நாட்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, 9 யூனிட் ரத்தம் வழங்கியும் அவரை மருத்துவ குழுவினர்கா ப்பாற்றியுள்ளனர்.  

தனியார் மருத்துவமனைகளில் இச்சிகிச்சை மேற்கொண்டால், 6 லட்ச ரூபாய் வரை செலவாகி இருக்கும். ஆனால் இன்னுயிர்கா ப்போம் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை மருத்துவ குழுவில் சிறப்பு நிபுணர்கள் சுந்தராம்பாள், பத்மநாபன், நந்தபிரபு, சுபா ஆகிய டாக்டர்கள் வழிகாட்டுதல்படி டாக்டர்கள் ராசு, செந்தில்குமார், கோகுல் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர். 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 872 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். அதில், 100க்கும்மேற்பட்டோரை கடினமான சிகிச்சைகளுடன் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மருத்துவ கண்காணிப்பாளர் ஸ்ரீதரன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, உள்ளிருப்பு உதவி மருத்துவ அலுவலர்கள் ராஜலட்சுமி, ராஜா, மது, நிர்வாக அலுவலர்கள் சரவணன், வேலுமணி மற்றும் செவிலிய கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

Similar News