உள்ளூர் செய்திகள்
சாமல்பட்டி அருகே நள்ளிரவில் துணிகரம் பூட்டை உடைத்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததால் பல கோடி நகை-பணம் தப்பியது
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்தது. அப்போது அலாரம் அடித்ததால் பல கோடி மதிப்பிலான நகைகள்- பணம் தப்பியது.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள குன்னத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நகை அடகு வைத்து பணம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் குன்னத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர்.
இதனால் வங்கியில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை மணி ஒலித்தது. வங்கியில் அலாரம் மணி தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்ததால் அருகில் இருந்தவர்கள் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஓடி வந்து பார்த்தனர். இதனை சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து சாமல்பட்டி போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை ஆய்வு செய்தனர்.
மர்ம நபர்கள் நோட்டமிட்டு திட்டம் போட்டு நள்ளிரவு இந்த வங்கியில் கொள்ளையடிக்க முயன்று இருப்பது தெரியவந்தது. இதனால் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளையர்களின் புகைப்படம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்இது பற்றி போலீசார் வங்கியின் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வங்கி லாக்கரில் உள்ள பணம், நகைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
குன்னத்தூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.