உள்ளூர் செய்திகள்
புதுவையில் தனித்தனி விபத்தில் பெண் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே வி.தட்டாஞ்சாவடி செந்தாமரைநகர் புதுத்தெருவை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மனைவி அம்ச வேணி (வயது53). இவர் பூ வாங்குவதற்காக புதுவை-விழுப்புரம் மெயின் ரோட்டில் அரும்பார்த்த புரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் திடீரென அம்சவேணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அம்சவேணிக்கு தலை மற்றும் தோல்பட்டை வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே விபத்தை ஏற்படு த்தியவரே அம்ச வேணியை மீட்டு ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்சவேணியின் மகன் ரத்னகுமார் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் ஆபத்தாரனபுரத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 47) இவரது மகள் சவுந்தர்யா வுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்து வக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செந்தில் குமாரும் அவரது மனைவி புவனேஸ்வரியும் உடனிருந்து மகளை கவனித்து வந்தனர். நேற்று முன்தினம் மதியம் செந்தில் குமார் தனது மனைவிக்கு உணவு வாங்க ஆஸ்பத்திரி எதிரே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக செந்தில் குமார் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த செந்தில் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு செந்தில் குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி புவனேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.