உள்ளூர் செய்திகள்
பட்டினப் பிரவேசம்

பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி- தருமபுரம் ஆதீனம் தகவல்

Published On 2022-05-08 04:30 GMT   |   Update On 2022-05-08 04:30 GMT
பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.
மயிலாடுதுறை:

தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டின பிரவேசம் நிகழ்வுக்கு மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தடையை நீக்கும்படி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பட்டினப் பிரவேசத்தை கண்டிப்பாக நடத்துவோம் என்று மதுரை ஆதீனம் உள்ளிட்ட மத குருமார்களும், பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோரும் தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமுகமான முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அதன்பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மயிலாடுதுறை தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். 

அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து, தி.மு.க. ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும், தருமபுர ஆதீன பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் இன்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பட்டின பிரவேசம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியிருப்பதாக கூறினார். பாரம்பரிய நடைமுறைக்கு தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார், விருப்பப்பட்டுதான் தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்கின்றனர் என்றும் ஆதீனம் குறிப்பிட்டார். 
Tags:    

Similar News