உள்ளூர் செய்திகள்
பயிற்சி முகாமில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசிய போது எடுத்த படம். அருகில் சம்பத் எம்.எல்.ஏ. உள்ளார்.

புதுச்சேரியில் காடுகள் அழிப்பு- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேச்சு

Update: 2022-05-05 09:03 GMT
புதுவையில் 24 சதவீதம் காடுகள் அழிந்துள்ளது என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பேசினார்.
புதுச்சேரி:

புதுவை காலநிலை மாற்றப்பிரிவு, புதுவை சுற்றுச்சூழல் தகவல் மையம், டெல்லி எரிசக்தி மற்றும் வள நிறுவனம்  ஆகியவை இணைந்து புதுவை யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சி திட்டத்தில் காலநிலை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் என்ற தலைப்பில் 2 நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

இதன் தொடக்கவிழா   ஓட்டல் சன்வேயில் நடந்தது. முகாமை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

புதுவை நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் இருந்தது. தற்போது இது 6 சதவீதமாக குறைந்துவிட்டது. 24 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளது. அண்டைநாடான பாகிஸ்தானில் 118 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது.

வேலூரில் 108 டிகிரி வெயில் நிலவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக  இது ஏற்படுகிறது. கொரோனா அதிகளவு நமக்கு தீங்கிழைத்தது. அதேநேரத்தில் சில நன்மைகளையும் செய்துள்ளது. 

ஒசோனில் ஏற்பட்ட ஓட்டை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஸ்காட்லாந்தில் நடந்த பருவநிலை மாற்ற மாநாட்டில் பிரதமர் 2030-க்குள் கரியமில வாயுவை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என கூறியுள்ளார். 

இதற்காக புதுப்பிக்கவல்ல எரிசக்தி பயன்பாடை அதிகரிக்கப்போவதாக கூறியுள்ளார். ஆர்.ஓ. தண்ணீர் குடிப்பதே கேடு விளைவிக்கும் என்கின்றனர். இதனால் நான் மழைநீரை குடிக்கிறேன். நிலத்தடிநீரில் 50 டி.சி. நச்சுத்தன்மை இருந்தாலேகுடிக்க முடியாது என்பார்கள். 

தற்போது புதுவையில் 700 டி.சி. நச்சுத்தன்மை இருப்பதாக கூறப்படுகிறது. நல்ல குடிநீரை மக்களுக்கு வழங்க திட்டங்கள் தீட்டியுள்ளோம். விரைவில் செயல்படுத்த உள்ளோம். பெரியவாய்க்காலை சுத்தப்படுத்த தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் கோரிக்கை வைத்தார். சுத்தப்படுத்திய மறுநாளே கழிவுநீரை வெளியேற்றுவார்கள்.

பலர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதால் தோட்டம், கிணறு கிடையாது. இந்த பயிற்சி முகாமில் எடுக்கும் முடிவுகளை அரசு செயல்படுத்த தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். 

விழாவில் சம்பத், எம்.எல்.ஏ., தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன், புதுவை சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மித்தா, சீனியர் பொறியாளர் ரமேஷ் உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். 

முகாமில் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், எரிசக்தி வள நிறுவனம், கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம், ஜிப்மர், புதுவை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்கின்றனர். இன்றும், நாளையும் நடைபெறும் 2 நாள் பயிற்சி முகாமில் பல்வேறு துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.
Tags:    

Similar News