உள்ளூர் செய்திகள்
சிறுத்தை

தேன்கனிக்கோட்டை அருகே குதிரை பண்ணை அருகே மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

Update: 2022-05-04 05:01 GMT
சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளியை அடுத்து பேளாலம் செல்லும் சாலையில் பெங்களூரை சேர்ந்த அலியுல்லா கான் (வயது 50 )என்பவருக்கு சொந்தமான பண்ணை தோட்டம் உள்ளது.

இந்த பண்ணையில் 20க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு சிறுத்தை, பண்ணைக்குள் புகுந்து 5 வயது குதிரையை கடித்து குதறி கொன்று அதன் உடலை சாப்பிட்டு சென்றுள்ளது.

இதுபற்றி தகவலறிந்த ஜவளகிரி வனச்சரகர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் குதிரையை கொன்றது சிறுத்தை தான் கொன்றது என உறுதியானது. இதனால் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க பண்ணை தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்தனர்.

அப்போது மீண்டும் அந்த சிறுத்தை பண்ணையில் புகுந்து இறந்து கிடந்த குதிரையின் உடலில் சாப்பிடும் காட்சிகள் பதிவானது. இதனால் குதிரை பண்ணை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் உள்ள கிராம மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. இதனால் தளி மற்றும் சுற்றுப்புற கிராமங்களான பேளாளம், நெல் மார், ஆச்சு பாலம், சூட சந்திரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பீதியடைந்து இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர் மாலை நேரத்திலே வீடு திரும்பி விடுகின்றனர்.

இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் எனவும், இருசக்கர வாகனங்களில் வருவோர் மாலையிலேயே வீட்டுக்கு வந்து விடுமாறும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கிராமங்களில் சுற்றி வனத்துறையினர் குழு அமைத்து முகாம் அமைத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விட்டு விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News