உள்ளூர் செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

ஈரோடு அருகே மளிகை கடையில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி

Update: 2022-05-03 04:34 GMT
ஈரோடு அருகே இன்று அதிகாலை மளிகை கடையில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

திருச்சி மாவட்டம் துறையூர் இடையர்பட்டியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரண்யா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

குமார் ஈரோடு பூந்துறை ரோடு வாய்க்கால்மேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். குமார் தனது சொந்த ஊரில் வீடு கட்டி வருகிறார். எனவே அந்த பணிகளை பார்வையிட அவர் ஊருக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சரண்யா மளிகை கடையை கவனித்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையின் ஷட்டரை சரண்யா பூட்டி விட்டு சென்றார்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் வழக்கம்போல் மளிகை கடையை திறக்க சரண்யா வந்தார். அவர் கடையின் ஷட்டரில் இருந்த பூட்டை திறக்க முயன்றார். அப்போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது. இதில் உட்கார்ந்த நிலையிலேயே சரண்யா இறந்து விட்டார்.

அந்த நேரத்தில் கடைக்கு பால் வாங்க அதே பகுதியை சேர்ந்த காவேரி என்ற பெண் வந்தார். அவர் சரண்யாவை அழைத்தார். அவர் பதில் ஏதும் சொல்லாததால் சந்தேகம் அடைந்த காவேரி சரண்யாவின் மீது கை வைத்தார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சுதாரித்துக் கொண்ட அவர் அலறி அடித்து கொண்டு ஓடி விட்டார். பின்னர் இதுகுறித்து அருகில் இருந்தவர்களிடம் கூறினார்.

இதையடுத்து ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்சார துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மளிகை கடையின் மின் இணைப்பை துண்டித்தனர்.

பின்னர் சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மளிகை கடை திறக்க வந்த தனது தாய் இறந்த தகவல் கிடைத்ததும் அவரது மகன் மற்றும் மகள் ஓடி வந்து தாயின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் துறையூருக்கு சென்ற சரண்யாவின் கணவருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்க்கால்மேடு பகுதியில் நேற்று இரவு காற்றுடன் லேசான மழை பெய்தது. எனவே மின்கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இதுகுறித்து போலீசாரும், மின்சார துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News