உள்ளூர் செய்திகள்
காலாப்பட்டில் தனியார் பள்ளி பெண் ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கமலக்கண்ணன் இறந்து விட்டார். இதையடுத்து லட்சுமி பெரியகாலாப்பட்டை சேர்ந்த சேகர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். லட்சுமியுடன் அவரது தாய் வள்ளி மற்றும் இளையமகள் ஜீவிதா ஆகியோர் வசித்து வந்தனர்.
லட்சுமி காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில நாட்களாக லட்சுமி இடுப்பு வலியால் அவதியடைந்து வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் லட்சுமிக்கு இடுப்பு வலி குறையவில்லை.
இந்த நிலையில் லட்சுமியின் மூத்த மகள் சரஸ்வதி தாய் வீட்டுக்கு வந்திருந்தார். பின்னர் சரஸ்வதி அவரது தங்கை ஜீவிதா மற்றும் பாட்டி வள்ளி ஆகிய 3 பேரும் பக்கத்து வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லட்சுமிக்கு இடுப்பு வலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த லட்சுமி வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மூத்த மகள் சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.