உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டிணம் அருகே கணக்கு வழக்குகளை கேட்ட போது பஞ்சாயத்து தலைவியை தாக்கிய ஊராட்சி செயலாளர்
காவேரிப்பட்டிணம் அருகே கணக்கு வழக்குகளை கேட்ட போது பஞ்சாயத்து தலைவியை ஊராட்சி செயலாளர் தாக்கியுள்ளார்.
காவேரிப்பட்டிணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தாமோதரஹள்ளி பஞ்சாயத்திற்கு தலைவியாக வெண்ணிலா முருகேசன் இருந்து வருகிறார். இந்த பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக சின்னசாமி பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் சின்னசாமி அலுவலகத்திற்கு சரிவர வருவதில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாயத்து தலைவியிடம் பேசும்பொழுது ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
அலுவலக பதிவேடுகள் சரிவர பராமரிப்பதில்லை என ஊராட்சி செயலாளர் மீது ஊராட்சி தலைவி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து நாளை நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கு நேற்று பதிவேடுகள் சரிபார்க்கும் பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவின் கணவர் முருகேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றி இருவருக்கும் இடையே கைகலப்பு ஆனது. இதனை தடுக்க முயன்ற பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவையும், ஊராட்சி செயலாளர் சின்னசாமி தாக்கியுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதனால் காயம் அடைந்த வெண்ணிலா காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவி வெண்ணிலாவிடம் கேட்டபோது, ஊராட்சியின் செயலாளர் சின்னசாமி பஞ்சாயத்துக்கான கணக்கு வழக்குகள் எதுவும் சரியாக வழங்குவதில்லை. மேலும் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான பணி ஆணைகளை வழங்குவதில்லை.
தொடர்ந்து தாமதம் ஏற்படுத்தியும், சரியாக அலுவலகத்திற்கு வராமலும் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் ஒரு பெண் என்று கூட பாராமல் அனைவரின் முன்னி லையிலும் தன்னை தகாத வார்த்தைகளாலும், ஒருமையிலும் பேசி வந்தார். இதனை தட்டிக்கேட்ட போது தனது கணவரையும் ஒருமையில் பேசினார் என தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து பாரூர் போலீசார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.